Breaking News

'உங்க வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்வீர்களா?'

வாட்ஸ்அப்பில் வலம் வந்த இளம்பெண்ணின் படம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரேணுகா நாயர் என்பது தெரிய வந்திருக்கிறது!

வீட்டில் இருக்கும் பெண்களிடம் திருட வரும் இளம்பெண் என்ற அடையாளத்துடன் ஒரு பெண்ணின் படமும் அத்துடன் அவரைப் பற்றிய ஒரு ஆடியோ வாய்ஸும் கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப்பில் சுற்றி வந்தது. அந்தப் பெண்ணின் படத்துக்கு ஆடியோ வாய்ஸ் கொடுத்து, அதில் துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் பெயரைச் சேர்த்தது சென்னையில் பாதுகாப்புப் பிரிவில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் என்பதையும் சென்னை காவல் துறை இந்த விவகாரத்தில் காட்டிவரும் மெத்தனத்தையும் கடந்த இதழில் நாம் விரிவாக எழுதியிருந்தோம்.
அதன் பிறகே சென்னை சைபர் க்ரைம் போலீஸார் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில்தான், வாட்ஸ்அப்பில் வெளியான அந்தப் பெண்ணின் படம் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த ரேணுகா நாயர் என்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே ரேணுகாவின் படத்துடன் வந்திருக்கும் மெசேஜில் அவர் துணிக்கடையில் திருடுவதாகவும், எச்சரிக்கையாக இருக்கும்படியும் குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரேணுகாவின் சகோதரர் சுதீர் நாயர் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
''என்னோட சகோதரி ரேணுகா மும்பையில் எல்.பி.ஜி அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவரைப் பிடிக்காத யாரோ சிலர் வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். இதனால் என் சகோதரி மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். அவரை எங்களால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. இதே உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படி ஒரு அவதூறு பரப்புவீர்களா... உங்களுக்கு வரும் தகவலை மற்றவருக்கு அனுப்புவதற்கு முன்பு அது உண்மையா என்று விசாரியுங்கள். தயவுசெய்து இனியாவது யாருடைய வாழ்க்கையிலும் விளையாடாதீர்கள். இப்படி ஓர் அவதூறுத் தகவலைப் பரப்பியவரை காவல் துறை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்!'' என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் சுதீர் நாயர்.
ரேணுகாவிடம் பேச முயற்சித்தோம். ''அவர் தற்போது பேசும் மனநிலையில் இல்லை!'' என்று சொல்லிவிட்டனர் அவரது குடும்பத்தினர்.
இந்த வழக்கை விசாரிக்கும் 'தானே’ சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சஞ்சு ஜானிடம் பேசினோம். 'ரேணுகா குறித்த அவதூறு வாட்ஸ்அப் மெசேஜ் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அதில் வந்த தகவல்கள் அத்தனையும் தவறானவை. இந்த மெசேஜ் முதலில் எங்கிருந்து கிளம்பியது என்று தெரிந்துகொள்ள வாட்ஸ்அப் நிர்வாகத்துடன் பேசியிருக்கிறோம். வாட்ஸ்அப் நிறுவனம் தகவலைக் கொடுக்க காலதாமதப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சில போலீஸார் ஆடியோவுடன் மெசேஜை அனுப்பி இருக்கிறார்கள் என்பது எங்கள் கவனத்துக்கு வந்தது. அதனால் இதுபற்றி சென்னை சைபர் க்ரைம் போலீஸாருடனும் பேசியிருக்கிறோம். எங்களிடம் உள்ள தகவல்களை சென்னை போலீஸ் கமிஷனருக்கும் அனுப்பியிருக்கிறோம்'' என்று சொன்னார்.
சென்னையில் இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''தானேவில் இருந்துதான் இந்த மெசேஜ் தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அங்கிருந்து யார் அனுப்பியது என்று கண்டுபிடித்தால், தமிழகத்தில் பரப்பியவர்களை எளிதில் பிடித்துவிடலாம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், ஜெயசீலன், முனுசாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. காவல் துறையில் இந்த மெசேஜை பகிர்ந்தவர்கள் பட்டியலையும் எடுத்து வருகிறோம். இந்த மெசேஜ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
''ரேணுகாவுடன் மும்பையில் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர்தான் இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்பியுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் இதைச் செய்தார் என்பதற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தியதும் அவரைக் கைது செய்வோம்!'' என்று சொன்னார் மகாராஷ்டிரா காவல் துறை அதிகாரி ஒருவர்.
தவறான தகவலைப் பரப்பியது யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!