Breaking News

பாஸ்போர்ட் விசாரணை எளிதாகிறது ! ஆன்லைனில் செயல்படுத்த புதிய சர்வர் : மத்திய அரசு ஏற்பாடு!

நெல்லை : பாஸ்போர்ட் பெறுவதில் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய சர்வரை தயார் செய்து வருகிறது. இது அமலுக்கு வரும்போது பாஸ்போர்ட் தொடர்பாக போலீஸ் விசாரணை எளிதாக முடிந்து விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் இறுதி விசாரணைக்காக போலீசாரிடம் அனுப்பி வைக்கப்படும். 

இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய சான்றிதழ்கள் வழங்குவதற்கென்றே போலீசில் தனியாக ‘‘பாஸ்போர்ட் பிரிவு’’ ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் தலைமையகங்களில் செயல்படும் இப்பிரிவு உளவுத்துறை அதிகாரிகளின் கீழ் இயங்குகிறது.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் வீட்டுக்கு செல்லும் உளவுப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு ஏதும் உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்கள். இதன் பின்னரே பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகள் நிறைவு பெற்று, பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். 

விசாரணைக்காக விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு போலீசார் நேரடியாக செல்லும்போது காலதாமதம் ஏற்படுகிறது. அதாவது, பெருநகரம் என்றால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு பாஸ்போர்ட் விசாரணை தபால்கள் அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தபால்கள் கொண்டு செல்லப்படும்.

 அங்குள்ள காவலர்கள் மூலம் விண்ணப்பித்தவர் குறித்து விசாரணை நடைபெறும். இதனால் காலதாமதம் என்பது தவிர்க்க முடியாததாகிறது.
இந்நிலையில் பாஸ்போர்ட் சேவையை விரைவாக முடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் அறிவுரை வழங்கினார். 

இதையடுத்து இப்பணிகளை எளிமையாக்கும் வகையில் பாஸ்போர்ட் விசாரணைகள் அனைத்தையுமே ஆன் லைனில் செய்து முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய மக்கள் தொகை பட்டியல், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் புதிய சர்வர் ஒன்று தொடங்கப்பட உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை ஆன் லைனிலேயே கண்டறியும் வகையில் கிரைம் அண்டு கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் என்ற பெயரில் புதிய முறையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 

இதன் மூலமாக பாஸ்போர்ட் விசாரணையை போலீசார் இருந்த இடத்தில் இருந்தே முடித்து விடலாம்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 

இதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இப்பணிகளை செய்து வருகிறார்கள். வரும் நவம்பர் முதல் ஆன்லைன் மூலமாக போலீசார் பாஸ்போர்ட் விவரங்களை சரிபார்க்கும் பணியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை