ஆப்பிள் நிறுவனத்தின் “ஐ போனை” ஹேக் செய்பவருக்கு, 1 மில்லியன் டாலர் பரிசு.
ஒருவரது கணிணியில் சேமிக்கப்பட்ட தகவல்களை அவரது அனுமதியின்றி அறிவதற்காக சிலர் ஹேக்கிங் செய்கிறார்கள். மேலும் இணையதளத்தை முடக்கி தகவல்களை அழிக்கும் செயல்களிலும் சில ஹேக்கர்கள் செயல்படுகிறார்கள்.
இதனால் பல்வேறு கணிணி நிறுவனங்கள், ஹேக்கிங்கில் கைதேர்ந்தவர்களிடம் தங்களது புதிய படைப்புகளை எப்படியெல்லாம் ஹேக்கிங் செய்ய முடியும் என்பதை கண்டறிந்து தங்களது படைப்புகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய படைப்புகளை ஹேக்கிங் செய்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசளிப்பதாக ஒரு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்துவதால் தங்கள் தகவல்கள் வெளியில் தெரியாது என்று பல்வேறு தொழில்அதிபர்கள் மற்றும் வசதியானவர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் ஆப்பிள் தயாரிப்புகளை ஹேக்கிங் செய்ய முடிகிறதா? என்பதை கண்டறிவதற்கான முயற்சியில் சீரோடியம் இணையதள நிறுவனர் சாவ்க்கி பேக்ரார் ஈடுபட்டுள்ளார். இவர் வூபென் என்கிற பிரபல ஹேக்கிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இவர் ஹேக்கிங் பற்றிய புதிய செய்திகளையும், அதன் புதிய முறைகளையும் கண்டறிந்து அதனை நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு அளித்து சம்பாதித்து வருகிறார்.
தற்போது இவர் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ஐபோன், ஐபேட் போன்ற ஆப்பிளின் புதிய தயாரிப்களை ஹேக் செய்வபவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
அவ்வாறு ஹேக் செய்தால் ஆப்பிளின் அடுத்த தயாரிப்புகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றியமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை