மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை
வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் பார்சிலோனா அணியின் நம்பிக்கை வீரருமான லயனல் மெஸ்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியுரிமையும் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது.
லயனல் மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட்சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவாய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மெஸ்சியும் அவரது தந்தை ஜார்ஜ் கார்சியோவும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக லயனல் மெஸ்சி நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், '' தனது வரி தொடர்பான விவகாரங்களை தந்தை ஜார்ஜ் கார்சியாதான் கவனித்து வந்ததாகவும் தனக்கு அதைபற்றி ஒன்றும் தெரியாது தெரியாது. எனவே தான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை நிராகரித்த பார்சிலோனா நீதிமன்றம் லயனல் மெஸ்சி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆனால் விசாரணை தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த வரிஏய்ப்பு விவகாரம் லயனம் மெஸ்சியின் கால்பந்து வாழ்க்கைக்கே இடையூறாக அமையும் என கருதப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டு சட்டப்படி, இந்த வழக்கில் மெஸ்சிக்கும் அவரது தந்தைக்கும் 22 மாதங்கள் சிறைத் தண்டனையும் தலா 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வரை அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 28 வயதான மெஸ்சி, 'போர்ப்ஸ்' பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஆண்டுக்கு 350 மில்லியன் டாலர்கள் வருவாயுடன் 10 வது இடத்தில் இருக்கிறார்.


கருத்துகள் இல்லை