நாகை தாமரைக்குளத்தில் ரூ.2¾ கோடி மதிப்பில் நடைபெற உள்ள மறுசீரமைப்பு பணிகளை தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம், தாமரைக்குளம்
நாகை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகை நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டது. ரூ.3 கோடிக்கு மேல் நிதிஒதுக்கப்பட்டு, இந்த குளம் தூர்வாரப்பட்டதுடன், சுற்றுச்சுவர், நடைபாதை மற்றும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து குளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் நிலையில் தாமரைக்குளம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து தரமற்ற வேலைகள் நடந்ததாக கூறி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
மறுசீரமைப்பு பணி
அதைதொடர்ந்து தற்போது குளத்தை மறுசீரமைப்பு செய்வதற்காக ரூ.2¾ கோடி மதிப்பில் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி தாமரைக்குளத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஏற்கனவே இடிந்து விழுந்து கிடந்த சுற்றுச்சுவரை பார்வையிட்டார். தற்போது நடைபெற உள்ள பணிகளை தரமாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது நாகை நகராட்சி ஆணையர் ஜான்சன், பொறியாளர் வசந்தகுமார், முன்னாள் நகரசபை தலைவர்கள் மஞ்சுளா, சந்திரமோகன், மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த முபாரக் உள்பட பலர் உடனிருந்தனர்.