Breaking News

கீழ்வேளூர் அருகே பரபரப்பு: 6 மாதமாக குடிநீர் வழங்காததால் மோட்டார் அறைக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம்



கீழ்வேளூர்,அக்.27: 6 மாதமாக குடிநீர் வழங்காததால் மோட்டார் அறைக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அகரக்கடம்பனூர் ஊராட்சி வடக்கு தெருவில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வடக்கு தெருவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 25 அடி ஆழ கிணற்றை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கிணற்றின் அருகே சுமார் 40 அடி ஆழத்திற்கு புதிய கிணறு அமைக்கப்பட்டு அந்த கிணற்று தண்ணீரை அகரகடம்பனூர் ஊராட்சியின் பெரும்பான்மையான பகுதிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கிணறு பாராமரிப்பு இல்லாத நிலையில் அந்த கிணறு அருகில் 3 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து  ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் வடக்கு தெருவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆழ்துளை கிணறு பராமரிக்கப்படாததால் கடந்த ஆறு மாதமாக  குடி நீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் வடக்கு தெரு மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று  தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து வடக்கு தெருவை சேர்ந்த பெண்கள், செயல்படாத மோட்டர் பைம் அறைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை அணிவித்து தேங்காய் உடைத்து  பூஜைகள் செய்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில் வீட்டருகே குடிநீர் இருக்கும் போது 6 மாதமாக மோட்டார் பழுது என்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் குடிக்க தண்ணீரை நீண்ட தூரம் சென்று  எடுத்து வர வேண்டியுள்ளது. பல முறை ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் பேசியும் நடவடிக்கை எடுக்க வில்லை. அவர்கள் அலட்சியத்தோடு உள்ளனர். எங்களுக்கு  மோட்டாரை உடனே சீரமைத்து  குடிநீர் வினியோம் செய்திட வேண்டும் என்றனர்.