Breaking News

நாகையில் ரவுடி கொலையில் 5 பேர் கைது..



நாகை,அக்.27: நாகையில் ரவுடி கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை செல்லூர் சாலையில் உள்ள உப்பனாற்றில் கடந்த 23ம் தேதி ஒரு சடலம் மிதப்பதாக நாகை டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை கொண்டு பிணத்தை கரைக்கு இழுத்து வந்தனர். பிணத்தின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும் 4 அடி நீளமுள்ள வாள் பிணத்தின் உடலில் செருகி பூமியில் குத்தியிருந்தது. இதனால் தண்ணீர் ஓட்டத்திற்கு பிணம் செல்லாமல் நிலையாக ஒரே இடத்தில் இருந்துள்ளது. இது குறித்து நாகை டவுன் போலீசார் ஒரு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பிணத்தை பார்த்த நாகை வெளிப்பாளையம் அக்கரைக்குளம் அண்ணா நகரை சேர்ந்த ராணி (47) என்பவர் அடையாளம் கூறினார். 



இறந்த நபர், மருதமுத்து, ராணி தம்பதியினரின் மகன் பிரபல ரவுடி ஜெட்லி என்கிற பழனிவேல் (27) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஜெட்லி கொலை வழக்கு தொடர்பாக, கோட்டைவாசல் நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்த செல்வம் மகன் கார்த்திசன் (29), பாப்பாக்கோவில் காலனி தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் செந்தில்குமார் (32), நாகை கீரைக்கொல்லைத்தெரு 3வது சந்தை சேர்ந்த மதியழகன் மகன் மணி என்கிற மணிகண்டன் (30), அந்தணப்பேட்டையை சேர்ந்த கலியபெருமாள் மகன் காட்டு குரங்கு என்கிற மணி என்கிற மணிகண்டன் (24), நாகை அரசன் காலனியை சேர்ந்த திருமால் என்கிற பெருமாள் மகன் குருவி என்கிற அறிவழகன் (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார்த்திசனின் மனைவியிடம் ஜெட்லி தவறாக நடக்க முயற்சி செய்ததால் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.