சென்னை தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து இன்று 788 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இன்று 788 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளது. இதையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ரயில்களில் செல்ல விரும்புவோர், 4 மாதத்துக்கு முன்பாகவே முன்பதிவு செய்திருந்தனர்.
இதனால், சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் எக்பிரஸ் ரயில்கள் அனைத்திலும் கடந்த 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் பஸ் பிரியர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அரசு சார்பில் இந்த ஆண்டு இன்று முதல் 17ம் தேதி வரை 4829 சிறப்பு பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 11,865 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் முன்னதாகவே தொடங்கிவிட்டது. இதுதவிர, சென்னை கோயம்பேடு பஸ்நிலையம், பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களிலும் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த 13ம் தேதி முதல் நேற்று மாலை வரை தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து அரசு பஸ்களில் 1,21,179 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் 70,296 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேர் தீபாவளிக்கு முந்தைய நாளான 17ம் தேதி செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். இந்த 1,21,179 பயணிகள் மூலம் போக்குவரத்துக் கழகத்துக்கு 2 நாளில் ரூ.4.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இன்று அதிகாலை முதல் இயக்கப்பட்டது.
சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், அண்ணாநகர், சைதாப்பேட்டை ஆகிய 5 இடங்களில் இருந்து இன்று ஒரே நாளில் 788 சிறப்பு பஸ்கள் மற்றும் 2,275 வழக்கமான பஸ்கள் என மொத்தம் 3,063 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. முன்பதிவு வசதி உள்ள பஸ்களில் இன்று வெளியூர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 16,282 பேரும், சென்னையில் இருந்து 8,090 என மொத்தம் 24,372 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.