Breaking News

பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

                                 

நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் உயிரிழந்தனர். பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர், நடத்தினர் 8 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கட்டிட இடிபட்டு இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொறையாறு பணிமனை 1974ம் ஆண்டு கட்டப்பட்டது என்று மேலாளர் சுரேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.பொறையார் போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நாகை ஆட்சியர் தெரிவித்தார். 


பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து 8ஊழியர்கள் பலியானது குறித்து முதலமைச்சரிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளிக்க இருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள பழைய பேருந்து பணிமனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட உயிரிழந்தவர்களில் 7 பேர் ஓட்டுநர், ஒருவர் நடத்துநர் என்று குறிப்பிட்ட அவர், அரசு போக்குவரத்துக்கழக கட்டட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணத்தை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார். கட்டட விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டனர். 


இதனிடையே பொறையார் பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வாகனம் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பணிமணை முன்பு முற்றுகை திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.