இட்லியின் பிறப்பிடம் இந்தோனேஷியாவா?
மும்பை: தினசரி நமது மூன்று வேளை உணவில் தவறாமல் இடம் பிடித்துவிடும் ஒரு உணவு என்றால் கண்டிப்பாக அது இட்லியாகதான் இருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை எந்த நோய் தாக்கியவராக இருந்தாலும் தவிர்க்காமல் சாப்பிடும் ஒரு உணவு இட்லி. அரிசி, உளுத்தம் பருப்பை ஊறவைத்து மாவு அரைத்து வேக வைத்து தயாரிக்கப்படும் இந்த இட்லி, சட்னி அல்லது சாம்பாருடன் ருசிப்பதற்கான சிறந்த உணவாகும். தென்னிந்தியா மட்டுமின்றி உலகளாவிய அளவில் அனைவராலும் விரும்பப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவாகவும் இட்லி மாறி வருகின்றது.பல்வேறு வடிவங்களில், பல்வேறு அளவுகளில், பல்வேறு வகைகளில் இட்லி தயாரிக்கப்பட்டு, பரிமாறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டல் நிர்வாக செப் சுஜன் முகர்ஜி கூறுகையில், “ தமிழகம் மற்றும் கர்நாடாகா இரண்டுமே இட்லியை கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடுகின்றன. 8ம் நூற்றாண்டில் இட்லி தயாரிக்கப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. ஆனால், இட்லி தென்னிந்தியாவில் தொடங்கியது இல்லை என்ற செய்தி நமக்கு ஆச்சரியமளிப்பதாகவே இருக்கும். சில உணவு வரலாற்று ஆசிரியர்கள், நமது இட்லி இந்தோனேஷியாவில் உருவானது என்று நம்புகின்றனர். இந்தோனேஷியாவின் சில பகுதிகளை ஆண்ட இந்து அரசர்களின் சமையலர்கள் உருவாக்கிய ரெசிப்பி தான் இந்த இட்லி என்றும் நம்பப்படுகிறது. இட்லி என்பது பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் கலவை தான். இவற்றின் அளவு மட்டும் வீட்டிற்கு வீடு, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.” என்றார்.
மேலும் அரபு வியாபாரிகளால் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இட்லி என்றும் சில உணவு வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி வேகவைத்த அரிசியில் தட்டையாக தயாரிக்கப்பட்ட உணவின் மீது தேங்காய் கலவையை பூசி தயாரிக்கப்பட்ட உணவே, பிற்காலத்தில் தயாரிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் இட்லி, தேங்காய் சட்டினி என உருவாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இந்த சின்னஞ்சிறிய இட்லி நாடு முழுவதும் பல்வேறு மாறுபாடுகளுடன் உலா வந்துகொண்டுள்ளது. காஞ்சிபுரம் இட்லி, ராமாஸ்செர்ரி இட்லி ஆகியன பாரம்பரிய வகைகளாகும். தற்போது மாடர்ன் காலத்தில் மென்மையை குறிக்கும் வகையில், மல்லிக்கைப்பூ இட்லி, பொடி இட்லி என்ற பெயர்களில் இட்லி தயாரித்து பரிமாறப்படுகிறது. மேலும் வீடுகளில் சாம்பார் இட்லி, இட்லி உப்புமாக்களும் தயாரிக்கப்படுகிறது. அனைத்து இட்லி வகைகளும் வேகவைக்கும் முறையில் தான் தயாரிக்கப்படுகிறது. அதற்கு பின்னர் சேர்க்கப்படும் சில மசாலாக்களை கொண்டு அவற்றுக்கு பெயரிடப்படுகிறது.
மும்பையில் உள்ள கபே மெட்ராஸ் உரிமையாளரின் மகன் தேவவ்ரத் கமாத் கூறுகையில், “ இட்லியில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இது உடல் நலத்துக்கு நல்லது. எளிதில் ஜீரணிக்க கூடியது. அதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இட்லி சாப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உணவு உடலுக்கு பாதுகாப்பானது. “ என்றார். மேலும் அவர் கூறுகையில் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு வகைகளில் இட்லிகளை தயாரிக்கின்றனர். வெள்ளரிக்காய், வெல்லம் சேர்த்து இட்லி தயாரிக்கப்படுகிறது. மேலும், பச்சை மிளகாய் தேங்காய் சேர்த்து டீக்கா வாலா இட்லி தயாரிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். கேரள மாநிலம், வைக்கமை சேர்ந்த இந்திரா நாயர் கூறுகையில், “ அடுப்பில் மண் பானை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதன் மீது துணியை போட்டு அதில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைக்கும் உணவாகும். இது காலப்போக்கில் மாறிவிட்டது. பாலக்காட்டில் இன்றும் சில இடங்களில் சில ஓட்டல்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகின்றது” என்றார். ரவா இட்லி, ராகி இட்லி, நவதானிய இட்லி, புதினா இட்லி என பல்வேறு வகைகளிலும் இட்லி தயாரிக்கப்படுகிறது.