மலிவான விலையில் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிய காகிதம்
சீனர்கள் முதலில் எலும்பு மற்றும் மூங்கில் பட்டைகளில் தான் எழுதினர். சுமேரியர்கள் ஈரமான களிமண் கொண்டு பலகைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் பப்பிரைஸ் என்ற நாணல் புல்லில் எழுதினர். தமிழர்கள் பனைஓலையை பக்குவம் செய்து எழுத்தாணி கொண்டு எழுதினர். தமிழ்இலக்கியங்கள் பலவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே ஆகும். தொடர்ந்து கல்வெட்டு, ஆட்டின்தோல், கன்றில்தோல் போன்றவற்றிலும் எழுதப்பட்டது. இருப்பினும் சீனர்கள் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினர். 8ம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனா மீது படையெடுத்து வெற்றி பெற்று, தாள்களை உருவாக்க தெரிந்தவர்களை அடிமைகளாக்கி அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்று அவர்களிடம் இருந்து ஐரோப்பியர் கற்று உலகமெங்கும் இந்த யுக்தி பரவியது.
பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாகவும், எடையும் அதிகளவில் இருந்தன. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். நவீன காகிதத்தை 1799ல் நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் கண்டுபிடித்தார். இது மரக்கூழினால் தயாரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மூங்கில் போன்ற மரங்களை சிறுசிறு துண்டுகளாக்கி நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே செல்லுலோஸ் எனப்படும் காகிதக்கூழ் ஆகும். இதனை நன்கு காய்ச்சி, நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினர். ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல்கழிவு, துணிகள், நார்கள், புற்கள், கரும்புசக்கைகள் உள்ளிட்டவை இதற்காக பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் மரத்துண்டுகளுக்கு பதிலாக ரசாயனமுறையில் அமிலங்களை சேர்த்து வேகவைத்து காகிதக்கூழ் தயாரிக்கின்றனர்.
மரக்கூழுடன் ஆலும் என்னும் வேதிப்பொருளை சேர்க்கின்றனர். இதனால் காகிதங்கள் அமிலத்தன்மையை அடைகின்றன. இயந்திரமயமாக்கப்பட்ட காகித உற்பத்தி குறிப்பிடத்தக்க பண்பாட்டு மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. எழுதுவதும், அச்சிடுவதும் மிகவும் எளிதாயிற்று. அமிலத்தன்மை உடைய காகிதங்கள் விரைவாக எழுத்துக்களை அழியச்செய்கின்றன. எனவே தற்போது புத்தகங்களை அச்சிடும் நிறுவனங்கள் அமிலத்தன்மை உடைய காகிதங்களை தவிர்க்கின்றன. காகிதம் உருவானதால் கடிதங்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் மூலம் மலிவான தகவல் பரிமாற்றத்திற்கு வழி ஏற்பட்டது.