Breaking News

பிழையான ஸ்மார்ட் கார்டு: பொதுமக்கள் மக்கள் அவதி

smartcard-issue-people-s-are-suffer

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட 90 சதவீதம் ஸ்மார்ட் கார்டுகள் பிழைகளுடன் அச்சிடப்பட்டுள்ளதால் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கமுடியாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

விருதுநகர் அருகேயுள்ள சத்திரரெட்டியாபட்டி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இதுவரை 450 குடும்பங்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 350 ஸ்மார்ட் கார்டுகள் உரியவர்களின் புகைப்படத்திற்கு பதில் மற்றவர்களின் புகைப்படங்கள், தவறான முகவரி, பிறந்த தேதியில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுடன் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் ரேஷன் பொருட்களை வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட் கார்டில் உள்ள தவறுகளை நீக்க ஒவ்வொரு முறையும் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். அத்துடன் பிழைகளை நீக்க இ-சேவை மையத்திற்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் அலையவேண்டிய சூழல் இருப்பதால், தினசரி கூலிக்கு வேலை செய்யும் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். குளறுபடிகளை நீக்க சிறப்பு முகாம் நடத்தவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.