டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்ததாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு தவறான தகவல்களை தெரிவித்து, பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டிருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து திறந்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஆயிரத்து 700 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனை எதிர்த்து தொடர்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழக அரசு சாலைகளை வகை மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்தபோது, சாலை மாற்றம் செய்வது பற்றி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் பெற்று வருவதாக, தமிழக அரசு கூறியது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் சில விளக்கங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை பிற்பகலில், வேறு சில வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, தமிழக அரசு வழக்கறிஞரை திடீரென அழைத்து சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறப்பது பற்றி உயர்நீதிமன்றம் தான் விளக்கம் பெற்றுவருமாறு கூறியதாக, உச்சநீதிமன்றத்தில் கூறியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
தாங்கள் ஒருபோதும் அதுபோன்று விளக்கம் பெற்று வர வேண்டும் என தெரிவிக்காதபோது, உயர்நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றத்தில் எப்படி கூறினீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் பொருந்தும் என்பது தங்களுக்கு தெரியாதா? என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, தமிழக அரசின் பொறுப்பற்றதன்மையை காட்டுவதாக உள்ளது என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.