Breaking News

காஸாவில் மீண்டும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ்- இஸ்ரேல் சம்மதம்!

காஸா,

காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் முதலில் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது பறந்து சென்று 51 முறை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக மீண்டும் இஸ்ரேல் விமானங்கள் காஸா பகுதியில் தாழ்வாக பறந்து சென்று தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் முக்கிய இடங்களை குறிவைத்து குண்டு வீச்சில் ஈடுபட்டன. நேற்று 20 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதில் மத்திய காஸாவில் 17 வயது மாணவர் உள்பட 10 பேர் பலியானார்கள். ஹமாஸ் தீவிரவாத இயக்க முக்கிய தலைவர் ஒருவரும் பலியானார். இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 வயது பாலஸ்தீனிய வாலிபர் உயிர் இழந்தார். கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் குண்டு வீச்சில் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 67 பேர் பலியாகி உள்ளனர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் அதிக அளவில் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், டெல்அவிவ் நகரில் நேற்று நடந்த ராணுவ அமைச்சக கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் தீவிரவாதிகளுடன் இனிமேல் சமரச முயற்சி மேற்கொள்ளப்படமாட்டாது என்றும், விமான தாக்குதல் தொடரும் என்றும் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் தீவிரவாதிகளும் போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.

இதற்கிடையே, இஸ்ரேல்–ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர்நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக எகிப்து குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பிறகு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பாலஸ்தீன பிரதிநிதி ஒருவர் கூறுகையில், மேலும் 72 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யுமாறு எகிப்து குழுவினர் தெரிவித்த யோசனையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறினார். பின்னர் இஸ்ரேலும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அங்கு நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 


No comments