குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற தந்தையின் தலையை துண்டித்து மரண தண்டனை வழங்கிய சவுதி அரசு!
பழைய படம். |
கடுமையான ஷரியா இஸ்லாமிய விதிகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பொதுவாக குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாகவே அளிக்கப்படுகின்றன. கற்பழிப்பு, கொலை, சமய இழிவு, ஆயுத கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனைதான் இங்கு தீர்ப்பாக அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சவுதியின் வடக்கில் உள்ள ஜவ்ப் பகுதியில் வசித்து வந்த மக்புல் பின் மடி அல்-ஷராரி என்பவர் அவரது இரண்டு வயது குழந்தையை சித்ரவதை செய்து கொன்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரது குழந்தை முஹம்மதுவை ஒரு குச்சியால் தலையின் பின்புறத்திலும், உடல் முழுவதும் ஷராரி அடித்துள்ளார். அந்தக் குழந்தையின் முகத்திலும் தொடர்ந்து குத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல இடங்களில் சூடும் வைத்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து சித்ரவதைப்படுத்தியதில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது என்று விசாரணையின்போது கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனையின் எண்ணிக்கை இத்துடன் சேர்த்து 18ஆக உள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன. கடந்த வருடம் இங்கு 78 பேர் இந்தத் தண்டனையைப் பெற்றுள்ளனர். இந்த மரண தண்டனை எண்ணிக்கை கடந்த 2011ஆம் ஆண்டில் 28 வெளிநாட்டவர்கள் உட்பட 82 என்ற எண்ணிக்கையுடன் உயர்ந்திருந்ததாக மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 27 வெளிநாட்டவர்கள் உட்பட 79ஆக சற்று குறைந்ததாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை