Breaking News

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா? - ஒரு அல்டிமேட் கைடு!




தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங்குக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், பல மாணவர்கள் கனவுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைய ஆர்வமாக இருப்பார்கள். இந்த வருடம் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை. மிக முக்கியமாக இன்ஜினியரிங் சேர்ந்தவர்களில் 56 சதவிகிதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இன்ஜினியரிங்கில் சேர்ந்துள்ள 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 மாணவர்களில், 26,770 பேர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதனால், நிறைய வருடங்கள் கழித்து மெக்கானிக்கல் பிரிவு அதிகமானபேர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவாக முன்னுக்கு வந்திருக்கிறது.

இந்த செய்தி ஒருவகையில் தேனாக இனிக்கிறது என்றாலும் இன்னொரு பக்கம் 'மறுபடியும் முதல்ல இருந்தா?' என்று தோன்ற வைக்கிறது. முதலில் இனிப்பதற்கான காரணம். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இவர்களில் எத்தனை பேர் மேனேஜ்மென்ட் சீட்டில் சேர்ந்தார்கள்? எத்தனை பேர் வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், வழக்கத்தைவிட அதிகமான பேர் வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று உத்தேசமாக சொல்லமுடிகிறது. வேறு துறைகள் என்றால் நிச்சயம் மனதுக்கு விருப்பமான துறையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் எதிர்நீச்சல் போட்டு நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார்கள் என நம்பலாம். எனவே, இன்ஜினியரிங் தவிர்த்து மற்ற துறைகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு முதலில் வாழ்த்துகள்!

மறுபடியும் முதல்ல இருந்தா? 

ஒரு பத்து, பதினைந்து வருடங்கள் ரீவைண்ட் செய்யுங்களேன்.. கம்ப்யூட்டர் சயின்ஸிலும், ஐ.டி. பிரிவிலும் போட்டி போட்டு மாணவர்கள் சேர்ந்தனர். கோவை, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கல்லூரிகளில் ஐ.டி சீட் கிடைத்தாலே அது ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. பல வீடுகளில் பையன் ஐ.டியில் சேர்ந்துவிட்டாலே, உறவினர்களிடம் திருமணம் வரை திட்டமிடத்துவங்கிவிடுவார்கள்.

இப்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு முதல் இடத்தில் இருப்பதுபோல், அப்போது ஐ.டி பிரிவு முதல் இடத்தில் இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல கல்லூரிகளிலும் ஐ.டி பிரிவு துவங்கப்பட, தரம் படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது. இன்று பல கல்லூரிகளில் ஐ.டி துறையின் நிலை பற்றி சொல்லத்தேவையே இல்லை. இந்நிலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்குக்கும் இதே நிலை இன்னும் 10 வருடங்களில் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்கான காரணங்களை அடுத்து வரும் 'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' பத்தியில் பார்ப்போம். இப்போது 'இன்ஜினியரிங்' பற்றிய அடிப்படைகளைப் பார்த்துவிடுவோம்.

இன்ஜினியரிங் = இயல்பறிவு (Common Sense)

1. இன்ஜினியரிங் என்றால் என்ன? கூகுளில் தட்டினால். "the branch of science and technology concerned with the design, building, and use of engines, machines, and structures" என்றது. இன்று பல பொறியியல் கல்லூரிகளில், இதை அப்படியே சொல்லித்தருகிறார்கள். டிவி ஷோக்களிலும், பத்திரிகைகளிலும், கல்வி எக்ஸ்பர்ட்டுகளும், மனித வள அதிகாரிகளும் இப்படி சொல்வார்கள். "ஃபீல்டுல வேலை எல்லாம் கொட்டி கிடக்கு சார். ஆனா, பசங்கள்ட்ட 'ஸ்கில்' இல்லையே!"





2. இன்ஜினியரிங் என்றால் என்ன? கூகுளின்படி, இன்ஜினியரிங் என்ற பெயர்ச்சொல்லுக்கு "the action of working artfully to bring something about" என்கிறது. வினைச்சொல்லாக எடுத்துக்கொண்டால் "skilfully arrange for (something) to occur"

இந்த இரண்டு பாயின்ட்டுகளுக்கும் (1&2) உள்ள வித்தியாசம்தான் இன்று இன்ஜினியரிங் கல்வியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை. உங்களுக்கு வேலை கிடைக்கவேண்டுமென்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டியது இரண்டாவது பாயின்ட்டில் இருப்பதுதான். ஆனால், உங்களுக்கு சொல்லித்தரப்படுவது முதல் பாயின்ட்டில் உள்ளதுபோல் வெறும் 'தியரி'தான். இன்ஜினியரிங் என்றாலே இயல்பறிவுதான். அதாவது காமன் சென்ஸ். உலகின் முதல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான சக்கரத்தை எப்படி கண்டுபிடித்தார்கள்? யாரும் ரேடியஸ் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கவில்லை. தேவை ஏற்பட்டது இயல்பறிவு வேலை செய்தது. சக்கரம் உருவானது. அவ்வளவுதான். இதுதான் இன்ஜினியரிங். தேவையை சரியாகப் புரிந்துகொண்டாலே அதற்கான தீர்வை தெளிவாக 'இன்ஜினியர்'(வினை)முடியும்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் = கணக்கிடப்பட்ட இயல்பறிவு (Calculated Common Sense)

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் = கணக்கிடப்பட்ட இயல்பறிவு என்று சொல்வதற்குக் காரணங்கள் சில இருக்கின்றன. இயல்பறிவு எப்போதும் மிக எளிதாக அடையக்கூடிய தீர்வைத்தான் சொல்லும். ஆனால், மெக்கானிக்கல் படிப்பைப் பொறுத்தவரை, வருங்காலத்தின் தேவையையும், கடந்த காலத்தின் அனுபவங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும். நேற்று என்ன தேவை இருந்தது? நாளை அந்த தேவை எப்படி மாறும்? என பல விஷயங்களை மனதில் வைத்துதான் ஒவ்வொரு மெக்கானிக்கல் பிரச்னைக்கும் தீர்வு காண்பார்கள்.





ஏனென்றால், சமன்பாடுகளாலும், எண்களாலும், Code--களாலும் பக்கங்களை நிரப்பிக்கொண்டு போகிற படிப்பு அல்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இதில் படிக்கப்போகிற ஒவ்வொரு விஷயத்தையும் உங்களால் 'உணர'முடியும். நாம் நிற்பது, நடப்பது, நம் வீட்டு குழாயில் தண்ணீர் வருவது, மின்சாரம் வயர்களில் பாய்வது, இந்த கட்டுரையை நான் டைப் அடிக்க பயன்படுத்திய கீபோர்டு என எல்லாவற்றிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இருக்கிறது. கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்த மேதை சார்லஸ் பாபேஜ்-ம் மெக்கானிக்கல் இன்ஜினியர்தான். சமூக பார்வையோடு இந்த படிப்பை அணுகினால், ஒவ்வொரு மெக்கானிக்கல் சமாச்சாரமும் மக்களை நேரடியாக ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பதை உணரலாம்.

இந்த வருடம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவை அதிகம்பேர் தேர்ந்தெடுத்திருப்பதால், அவர்களுக்கு முக்கியமாக சில விஷயங்களை தெளிவுபடுத்திவிடலாம். இவர்களில் எத்தனை பேர் ஆசைப்பட்டு இந்த பிரிவை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

'மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஒரு எவர்க்ரீன் ஃபீல்டு சார், எப்போ வேணா வேலை கிடைக்கும்', 'மெக்கானிக்கல் படிச்சா ஃப்யூச்சர் சேஃப்' போன்று நிறைய ஊக்கமூட்டுவார்கள். இவற்றை நம்பி, மெக்கானிக்கல் படிப்பை கடனுக்கு படித்துவிட்டு இன்று வேலையில்லாமல் தமிழகத்தில் நிறைய மெக்கானிக்கல் பட்டதாரிகள் அலைந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படியே வேலை கிடைப்பவர்களுக்கும் கோவை, சென்னை போன்ற நகரங்களின் வெளியில் இருக்கும் சிறிய நிறுவனங்களில் ஓடாய்த் தேய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜாலியாக, உணர்வுபூர்வமாக படித்தால், அனுபவத்தில் இருந்து சொல்லிக்கொடுக்கப்பட்டால்மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போல ஒரு படுசுவாரஸ்யமான படிப்பு இந்த உலகில் கிடையாது. ஏனென்றால், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்பதுதான் இன்று எல்லாவற்றிற்கும் அடிப்படை. நாம் எப்படி ஸ்திரமாக காலால் நிற்கிறோம் என்பதற்குக் கூட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூலம் விளக்க முடியும். இனி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (ஆட்டோமொபைல் பிரிவில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்) படிக்கப்போகிறவர்களுக்கான சில குறிப்புகள்!

முதல் வருடத்தில் படிக்கப்போகும் படிப்புகள் அனைத்தும் பள்ளிகளில் படித்த பாடங்களுடைய தொடர்ச்சி போல இருக்கும். மேலும், முதல் வருடத்தில் வரும் கணிதம், சமன்பாடுகள் அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பயன்படும். முதல் வருடத்தில் எக்காரணம் கொண்டும் அரியர் வைக்கவே கூடாது. வைத்துவிட்டால், எப்பாடுபட்டாவது அடுத்த செமஸ்டரில் க்ளியர் செய்துவிடுங்கள்.

தெர்மோடைனமிக்ஸ்தான் அறிவியலில் மிக அடிப்படையான பாடம். ஒருவகையில், இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் திரைக்கான மின்சாரம் கூட தெர்மோடைனமிக்ஸ்-ன் காரணமாக உருவாகியிருக்க முடியும். ஹீட் அண்டு மாஸ் டிரான்ஸ்ஃபர் எனப்படும் HMT பாடமும் மிக முக்கியமான பாடம்.

மெக்கானிக்கல் பிரிவிலேயே மிக எளிதான, ஜாலியான பாடம் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்தான். அடிப்படைகளை தெளிவாக கற்றுத்தந்தாலும், தற்போது ஆட்டோமொபைல் துறையில் உள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை இணையத்தில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் மூன்றாவது வருடம்(கல்லூரியைப் பொறுத்து மாறுபடும்) வரும்போது நடத்தும் சிம்போஸியத்தை, திருவிழாபோல் நடத்தாமல், ஆக்கபூர்வமாக அந்த நாட்களை செலவிடுங்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிபார்ட்மென்ட்தான் 'கெத்தான' டிபார்ட்மென்ட் என்பதைக் காட்ட சிம்போஸியத்தை கல்ச்சுரல்ஸாக மாற்றிவிடாதீர்கள். பல பொறியியல் கல்லூரிகள் சிம்போஸியம்கள் கடமைக்காகவே நடத்தப்படுகின்றன.

SAE போன்ற டெக்னிக்கல் அமைப்புகளில் உறுப்பினர் ஆகிவிட்டால், உங்கள் துறையில் இயங்கும் ஆளுமைகளை சந்திக்கவும், அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு கிடைக்கும்.









இறுதி வருட ப்ராஜெக்ட்டை சிரத்தை எடுத்து 'நீங்களே' செய்ய வேண்டும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்டுகளை விற்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன. சில பிரபல நிறுவனங்களில்கூட ஏற்கனவே செய்த ப்ராஜெக்ட்டை கொடுப்பார்கள். இவர்களிடம் காசையும், நேரத்தையும் வீணாக்காமல், நீங்களே குழுவாக உழைத்து ஒரு மாடலை தயாரித்துக்காட்டினால், அது இயங்கும்போது கிடைக்கும் அனுபவமே அலாதியானது. ப்ராஜெக்ட் 'வாங்கி' முடித்தவர்களுக்கும், உழைத்து செய்தவர்களுக்கும் ஒரே மார்க் என்றாலும், நீங்களாக ஒரு ப்ராஜெக்ட்டை செய்யும்போது அதில் கிடைக்கும் அனுபவங்கள் காலத்துக்கும் கைகொடுக்கும். குழுவாக இயங்குவது, திட்டமிடுதல், தேவையை உணர்தல், உருவாக்கியதை விளக்குதல், மார்க்கெட்டிங் என நிறைய விஷயங்களை ப்ராக்டிக்கலாக உணர, இன்ஜினியரிங் படிப்பில் இருக்கும் ஒரே வாய்ப்பு இறுதி வருட ப்ராஜெக்ட் மட்டுமே!

தேடல் இருக்கவேண்டும். ஏனென்றால், இப்போது இருக்கும் சிலபஸ், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படவில்லை. இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். குறிப்பாக யூடியூப், மெக்கானிக்கல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம். மெக்கானிக்கல் படிப்பில் இருக்கும் சில சிக்கலான விஷயங்களை, யூடியூபில் ஒரு விடியோவில் விளக்கமுடியும். குறிப்பாக EngineeringExplained போன்ற யூடியூப் சேனல்களை பார்ப்பது பலன் தரும்.





மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் தியரியாக விளக்கமுடியும். ஆனால், அதை 'உணர்ந்து' படிக்கும்போது இன்னமும் அற்புதமாக இருக்கும். உதாரணத்துக்கு, இன்ஜினுடைய சக்தி விபரங்களைக் குறிக்க Horsepower மற்றும் Torque எண்களைப் பயன்படுத்துவார்கள். இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. இதில் Horsepower என்பது சக்தியைக் குறிக்க கணக்கிடப்படும் ஒரு எண் மட்டுமே. ஆனால், டார்க் என்பதை எண்ணாகவும் குறிக்க முடியும். நீங்கள் உணரவும் முடியும். மாநகரப் பேருந்துகளில் முதல் கியரில் மட்டும் ஏன் அவ்வளவு இழுக்கிறது என்பதற்குக் காரணம் டார்க்தான். முதல் கியரில் அதிக டார்க் சக்கரங்களுக்குச் செல்வதால், அதிக இழுவைத் திறன் கிடைக்கிறது. ஆனால், Horsepower-ஐ உணரமுடியாது. இதை பல கல்லூரிகளில் சொல்லித்தருவதில்லை.

மெக்கானிக்கல் மாணவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டிய விஷயங்களுள் டிரைவிங்கும் ஒன்று. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை காதலித்து படித்த மாணவர்கள் 'வாகனம் ஓட்டுதல்' என்ற விஷயத்தை மிக வித்தியாசமாக அணுகுவதைப் பார்க்கலாம். காரணம், அவர்கள் படிப்பை சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்பதனால்தான்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை அதற்குரிய மரியாதையையும், மதிப்பையும் கொடுத்து படித்தால், உங்களுக்கு எந்த மாதிரியான வேலை தேவை? என்பதை நீங்களே முடிவு செய்வீர்கள். நான்கு வருடம் மெக்கானிக்கல் படித்துவிட்டு, ஐ.டி துறையில் வேலைபார்ப்பதைவிட கொடுமை வேறு ஏதும் கிடையாது.

"படித்துவிட்டோம், ஏதோ ஒரு வேலை கிடைத்தால் பரவாயில்லை" என்ற உணர்வுடன் இந்த படிப்பைப் படிக்கவேண்டாம். உங்களுக்கு என்ன வேலை பிடிக்கும் என்பதுதான் உங்களுக்கு முதலில் தெரிந்திருக்கவேண்டும். மெக்கானிக்கல் படிப்பைப் பொறுத்தவரை எவ்வளவு மோசமான கல்லூரியில் படித்திருந்தாலும் சரி, உங்களிடம் 'தேடல்' இருந்தால், வேலை உங்களைத் தேடி வரும்!

வேலையில்லா பட்டதாரிகள் உருவாக்கப்படுவதில்லை..உருவாகிக்கொள்கிறார்கள்!