Breaking News

கென்ய நாட்டில் இருந்து நாடு திரும்பிய தேனி வாலிபர் எபோலோ வைரஸ் தாக்குதலா?

பழனிசெட்டிபட்டி, 
கென்ய நாட்டில் இருந்து நாடு திரும்பிய தேனி வாலிபர் சென்னையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை எபோலோ வைரஸ் தாக்கியதா? என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


தேனி வாலிபர் 

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்–கலைவாணி தம்பதியரின் மகன்கள் பாலாஜி, பார்த்திபன் (வயது 26). பாலாஜி ஆட்டோ ஓட்டி வருகிறார். பிளஸ்–2 வரை படித்துள்ள பார்த்திபன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் கென்ய நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கென்ய நாட்டிற்கு திரும்பி சென்றார்.
இந்த நிலையில் இவருடைய தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் கடந்த 8–ந்தேதி கென்யாவில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு சென்றார். இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது எபோலோ வைரஸ் என்ற ஆட்கொல்லி நோய் தாக்குதல் இருப்பதால் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அனைத்து நாடுகளிலும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி துபாய் சென்ற பார்த்திபனுக்கு அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

எபோலா வைரஸ் தாக்குதலா? 
மருத்துவ பரிசோதனையில் பார்த்திபனுக்கு எபோலா வைரஸ் தாக்குதல் பாதிப்பு இருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகப்பட்டனர். அதன் பேரில் அவர் துபாயில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். சென்னை வந்த அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு எபோலோ வைரஸ் தாக்கி இருக்கிறதா? என்று டாக்டர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பார்த்திபனின் உறவினர்கள், அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு கிளம்பி சென்றுள்ளனர். இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பார்த்திபனின் தந்தை நேற்று முன்தினம் இறந்தது அவர்களின் உறவினர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. பார்த்திபனை போல கொடுவிலார்பட்டியை சேர்ந்த மேலும் 20 பேர் கென்ய நாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments