மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31–க்குள் புதிய வசதி அறிமுகம்
செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் செல்போன் வைத்துள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் சேவை பெற்று வருகிறபோது, அந்த சேவையில் அதிருப்தி அடைந்தால், அந்த எண்ணை மாற்றிக்கொள்ளாமல், இங்குள்ள மற்றொரு சேவை நிறுவனத்துக்கு மாறி விடலாம். சேவை நிறுவனம் மாறும். ஆனால் செல்போன் எண் மாறாது. இப்போது இந்த வசதி ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்தான் இருக்கிறது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று இதைச் செய்ய முடியாது. ஒரு பிராந்தியத்துக்குள்தான் இந்த வசதியை செய்து கொள்ள முடியும்.
இப்போது, முழுமையான ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதியை வழங்க தொலை தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது. இந்த வசதியை வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்துள்ள சிபாரிசை, தொலை தொடர்பு கமிஷன் ஏற்றுக்கொண்டு விட்டது. இனி இதற்கு மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் மட்டும் ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளது.
இந்த முழுமையான ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி வந்து விட்டால், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு செல்போன் வாடிக்கையாளர் நாட்டின் பிற மாநிலங்களில் குடியேறுகிறபோது, தனது செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் அங்குள்ள ஒரு சேவை நிறுவனத்திடம் இருந்து சேவையை பெற முடியும். இந்த வசதி மார்ச் 31-க்குள் அறிமுகம் ஆகிறது.
ஆகஸ்டு 31-ந் தேதி நிலவரப்படி நமது நாட்டில் 13 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்வதற்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.