Breaking News

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு: ஆய்வில் தகவல்

      

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து, மாநில நில  மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் அவ்வப்போது ஆய்வு  மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 3,280  பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,559  ஆழ்துளை  கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்படுகிறது.  தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் நீர் அளவு,  மொத்தமாக ஒவ்வொரு மாதமும் நீர்வள ஆதாரத்துறை மூலம்  கணக்கிடப்படுகிறது. பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு கடந்த ஆண்டு  இல்லாததும், வணிக நோக்கில் அதிகளவு நீர் எடுக்கப்படுவது,  அணைகள், ஏரிகளை தூர்வாராமல் அலட்சியம் காட்டி வருவது நிலத்தடி  நீர் குறைய முக்கிய காரணமாகும். மேலும், கடந்த 2003 அதிமுக ஆட்சி  காலத்தில் கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறையில்  இருந்தது. இந்த சட்டம் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த கொண்டு  வரப்பட்டது. இதன்படி அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு  மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. 

ஆனால், தொடர்ந்து இந்த திட்டத்தை பின்பற்ற அரசு எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தமிழகம் முழுவதும்  நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே  வருகிறது. கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில்  நடத்தப்பட்ட ஆய்வில் 2013 செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில்  தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,  கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி,  திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர் ஆகிய 21  மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆனால்,  கிருஷ்ணகிரி, கடலூர், ஈரோடு, கரூர், பெரம்பலூர், தர்மபுரி,  கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், ஆகிய 11  மாவட்டங்களில் கடந்த ஆண்டு 2013 செப்டம்பர் மாதத்தை  ஒப்பிடுகையில் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.