Breaking News

டிரெண்டிங்! வேட்டிய மடிச்சுக்கட்டு...


ஆண்களின் கம்பீரம் - வேட்டி. தமிழர்களின் பாரம்பரிய உடை. விழாக் காலங்களில், பேன்ட் அணிவதைத் தவிர்த்து, வேட்டி அணியும் பழக்கம், இளைஞர்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சென்னையில் நடந்த விழாவில், வேட்டி அணிந்த நீதிபதி அனுமதிக்கப்படாத விவகாரம், சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குப் பிறகு, வேட்டி அணியும் ஆர்வம், தமிழக இளைஞர்களிடம் அதிகமாகப் பரவியது என்றால், அது மிகையில்லை.


நூலிழைகளால் துணியை உருவாக்க மனிதன் அறிந்த காலம் முதல், ஆண்களிடம் வேட்டி அணியும் பழக்கம் துவங்கிவிட்டது. தமிழகத்தின் காலநிலை, கலாசாரம், பண்பாடு மற்றும் தொழில் முறைக்கு ஏற்றது வேட்டி. இதனால், அது பாரம்பரிய உடையாக மாறியது. சங்க காலத் தமிழ் நூல்களில் வேட்டி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழங்காலக் கோயில்களில் இடம்பெற்றுள்ள சிலைகளில், வேட்டி வடிவ உடைகளை ஆண்கள் அணிந்திருப்பதைக் காண முடிகிறது.


                                     


நான்கு முழம், எட்டு முழம், கரை வேட்டி என வேட்டிகளில் பல வகைகள். பட்டு, பருத்தி, பாலியஸ்டர் எனப் பலவகைத் துணிகளிலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. வெள்ளை நிறத்தில் மட்டுமே தயாரான வேட்டிகள் தற்போது பல வண்ணங்களில் உருவாக்கப்படுகின்றன. வேட்டியைக் கட்டுவது கூட ஓர் அழகு. கட்டத் தெரியாதவர்கள் கூட, எளிதாகக் கட்டுவதற்கேற்ப ‘ஒட்டிக்கொள்ளும்’ வேட்டிகள் வந்துவிட்டன. சிறுவர்கள் கட்டுவதற்கும் அழகழகான வேட்டிகள் கிடைக்கின்றன.


                                      


வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது, கோடி வேட்டி. இவை திருமணம் போன்ற விசேஷ நாட்களில் அணியப்படுகிறது. விரத நேரங்களில் சிவப்பு, காவி, நீலம், கருப்பு வண்ணங்களில் வேட்டிகள் உடுத்தப்படுகின்றன. திருமணத்தின்போது மணமகன் பட்டு வேட்டி உடுத்துவது வழக்கத்தில் உள்ளது. மன்னர்கள், வேட்டிகளைத் தங்க ஜரிகைகளுடன் கட்டுவது வழக்கம். தமிழர்கள் மட்டுமல்ல; தென் மாநிலத்தினர் மட்டுமல்ல; வட மாநிலத்தினரும் தற்போது வேட்டி அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


                                   

நகர்ப்புற இளைஞர்கள் குழுவாக இணைந்து வேட்டி உடுத்தி, நகர்வலம் வருவது இப்போது பேஷன். ஆண்டுதோறும் ஜன. 6ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு, ரோமானியர்களுக்கே ஆடை அனுப்பி, நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் நீண்டகால அடையாளமாகத் தனித்துவம் பெற்று வேட்டி திகழ்கிறது.


                                 


எட்டு முழ வேட்டியை  ஐந்து கச்சம் வைத்துக் கட்டினால் அது பஞ்சக்கச்சம். அரசியல்வாதிகள் என்றால் கட்சிக் கொடியின் வண்ணம், வேட்டிக்கரைகளில் கட்டாயம் இருக்கும். வேட்டி அணிதல் சவுகரியம். கைக்குட்டை, துண்டாகக் கூடப் பயன்படும். மடித்துக் கட்டலாம். படுக்கும்போது குளிரடித்தால், வேட்டியே போர்வையாகிவிடும். வேட்டி, பன்முக உடை. பல பயன்கள். வேட்டிகளில் பை இல்லையே என்ற குறையும் தற்போது போய்விட்டது. பைகள் உள்ள வேட்டிகள் விற்பனைக்கு வந்துவிட்டன.