துபாயிலிருந்து விரைவில் விமான சேவை தொடங்கும் என எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் துபாயிலிருந்து குறைந்த அளவிலான பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று துபாயின் பிரதான விமான நிறுவனமான எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அமீரக அரசின் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் எமிரேட்ஸ் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் சரக்கு போக்குவரத்து மட்டும் இயக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக துபாயிலிருந்து வெளிச்செல்லும் பயணிகளுக்கு மட்டுமான விமான சேவை அளிப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த விமான சேவையில் சரக்கு மற்றும் வணிக போக்குவரத்தும் மேற்கொள்ளப்படும். என்று எமிரேட்ஸ் நிறுவன தலைமை அதிகாரியும் துபாய் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவருமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
இயக்கப்படும் இடங்கள் :
பயணிகள் விமான சேவை ஒப்புதலை அடுத்து முதற்கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துபாயிலிருந்து கீழ்கண்ட நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
துபாயிலிருந்து லண்டன் ஹீத்ரோ (DXB – LHR)
துபாயிலிருந்து ப்ராங்புருட் (DXB – FRA)
துபாயிலிருந்து பாரிஸ் (DXB – CDG)
துபாயிலிருந்து பிரஸ்ஸல்ஸ் (DXB – BRU)
துபாயிலிருந்து சூரிச் (DXB – ZRH)
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வாரம் 4 விமானங்களும் மற்ற நகரங்களுக்கு வாரத்தில் மூன்று விமானங்களும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை