Breaking News

நாகை மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி..


நாகப்பட்டினம், 

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போனது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல், பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கருகின. அதைதொடர்ந்து வயல்கள் வறண்டு பாலைவனமாக காட்சியளித்தது. இதனால் கால்நடைகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டது. மேலும், நாகை மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தநிலையில் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. அதைதொடர்ந்து நாகையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

                                   

வேளாங்கண்ணி,

நேற்று நாகை மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, கீழையூர், திருப்பூண்டி, தலைஞாயிறு, வாய்மேடு, திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பலத்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், தற்போது நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெய்த இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்தால் முளைத்து வரும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். நாகை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 87.5 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக தலைஞாயிறில் 10.80 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.