Breaking News

பிரான்சு பெண்ணுடன் புதுவை வாலிபர் திருமணம்: மாட்டு வண்டியில் ஊர்வலம்..


பிரான்சு நாட்டை சேர்ந்த இளம்பெண், ப்ளார். இவருக்கு இந்திய கலாச்சாரம் மீது அதிகமான ஈடுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்தார். பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளுடன் இந்திய கலாச்சாரம் பற்றி படித்தார். பிறகு புதுவையிலேயே பரதநாட்டிய பயிற்சி நிலையம் அமைத்து நடத்தி வருகிறார்.

இவர், இங்கு உள்ள இந்தோ–பிரான்சு கலாச்சார மையத்துக்கு அடிக்கடி செல்வார். அப்போது புதுவை கந்தப்ப முதலி வீதியை சேர்ந்த விஜய்லோடி (வயது 26) என்ற கட்டிட காண்டிராக்டர் அறிமுகம் கிடைத்தது. இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்.
விஜய்லோடியும், ப்ளாரும் புதுவையில் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி நட்புடன் பழகி வந்தனர். இது, நாளடைவில் காதலாக மலர்ந்தது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். கல்யாணத்துக்கு இரு தரப்பிலும் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டது.

அதன்பேரில் புதுவையில் இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ப்ளாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் புதுவை வந்து சேர்ந்தனர்.
ப்ளார் விருப்பப்படி மாப்பிள்ளை–பெண் ஊர்வலத்துக்காக 2 மாடுகள் பூட்டப்பட்ட வில்வண்டியை தேடினர். ஆனால் புதுவையில் கிடைக்காததால் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 1 நாள் வாடகையாக ரூ. 17 ஆயிரம் கொடுத்து வரவழைக்கப்பட்டது.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த வண்டியில் மணமக்கள் மணக்கோலத்துடன் அமர வைக்கப்பட்டனர். ஜல்... ஜல்... என்ற சலங்கை மணி சத்தத்துடன் அந்த வண்டி முன் செல்ல, இரு குடும்பத்தையும் சேர்ந்த சுமார் 200 பேர் ஊர்வலமாக பின்தொடர்ந்து நடந்து வந்தனர். கடற்கரை சாலை அருகே உள்ள ‘கப்ஸ்’ கிறிஸ்தவ ஆலயத்தில் அனைவரது வாழ்த்துக்களுடன் விஜய்லோடியும், ப்ளாரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 

பிறகு இந்து முறைப்படி மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டினார்.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் அன்புடன் ஒருவரையொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டனர். பிறகு திருமண விருந்துக்கு அதே வில் வண்டியில் புறப்பட்டு சென்றனர்.