ஐபிஎல் பணமழையிலிருந்து இந்திய வீரர்கள் வெளியே வரவேண்டும்: மைக்கேல் வான்..
ஐபிஎல் கிரிக்கெட்டை விடுத்து இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன் வரவேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
அன்று தோனியிடம் ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டம்தான் இந்திய வீரர்களின் பின்னடைவுக்குக் காரணமா என்று கேட்டபோது ‘ஐபிஎல் மீது பொறாமை வேண்டாம்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பதில் அளித்தார்.
இன்று மைக்கேல் வான், ஐபிஎல் கிரிக்கெட்டிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடுத்து இங்கிலாந்தில் வந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். என்னுடைய பரிந்துரை இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வைப்பதாகும்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் ஜிகினா மற்றும் பணமழைக்கு வெளியே பரவலான கிரிக்கெட் அணுகுமுறைகளுக்கு, ஆட்டங்களுக்கு இந்திய வீரர்கள் பலர் தங்களை உட்படுத்திக் கொள்வது அவசியம். இங்கிலாந்தில் எப்படி பேட் செய்வது பந்து வீசுவது என்பதை அவர்கள் கற்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளில் பெரிய வீரர்கள் பலர் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். இது நிச்சயம் வளர்ச்சிக்கு உதவும்” என்கிறார் வான்.
சுனில் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சேவாக், ஜாகீர் கான், முரளி கார்த்திக் என்று இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்தில் ஆடியுள்ளனர்.
ஏன் லாரா, ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் உள்ளிட்ட அயல்நாட்டு பெரிய வீரர்களும் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டினால் பயனடைந்துள்ளனர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் தற்போது சயீத் அஜ்மல், இந்தியாவின் ஹர்பஜன் சிங் என்று கவுண்ட்டி கிரிக்கெட்டில் நிறைய கற்றுக் கொண்டுள்ளனர்.