Breaking News

பழமையான கார்-மோட்டார் சைக்கிள் கண்காட்சி: சென்னையில் 24-ந்தேதி நடக்கிறது..





பழமையான கார் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி சென்னையில் 24-ந்தேதி நடக்கிறது.

கார் கண்காட்சி


இதுதொடர்பாக ‘‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்’’ தலைவர் பால்ராஜ் வாசுதேவன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரம்பரியமிக்க பழைய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பாளர்களின் முதன்மை நிறுவனமான எங்களுடைய கிளப் சார்பில் 10-ம் ஆண்டு பாரம்பரிய கார்-மோட்டார் சைக்கிள் கண்காட்சி, அணிவகுப்பு நிகழ்ச்சி வரும் 24-ந்தேதி காலை 9 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் தொடங்குகிறது.

கண்காட்சியை அசோக் லைலாண்ட் நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக டி.வி.எஸ்.நிறுவனத்தின் நிர்வாக இணை இயக்குநர் ஆர்.தினேஷ் கலந்துகொள்கிறார்.

சிறந்த கார்களுக்கு பரிசு

கண்காட்சியில், 1920-ம் ஆண்டு முதல் 1980 வரை சாலைகளில் வலம் வந்த பல்வேறு மாடல்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கார்களும், 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இடம் பெறுகின்றன.

மோட்டார் வாகன துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த கொல்கத்தாவை சேர்ந்த ராஜா முகர்ஜி, பார்த்தா பானிக் ஆகியோர் நடுவராக இருந்து சிறந்த கார்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். சிறந்த கார்களாக தேர்ந்தெடுக்கப்படும் காரின் உரிமையாளர்களுக்கு, ‘ஸ்கோடா இண்டியா லிமிடெட்’ நிர்வாக இயக்குநர் சுதிர்ராவ் பரிசு வழங்குகிறார்.

அனுமதி இலவசம்


கண்காட்சியையொட்டி, டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து புறப்படும் பாரம்பரிய கார் அணிவகுப்பு, ஸ்பர்டாங் சாலை, காலேஜ் ரோடு, பாந்தியன் சாலை வழியாக மீண்டும் டான் பாஸ்கோ பள்ளியை வந்தடையும். பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, கிளப்பின் செயலாளர் எஸ்.கைலாஷ், பொதுமேலாளர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், தாஜ் கன்னிமாரா ஓட்டல் பொதுமேலாளர் சாம்தாட் தத்தா ஆகியோர் உடனிருந்தனர். கண்காட்சியில் பங்கேற்க இருக்கும் 30 பாரம்பரிய கார்களும் பேட்டியின்போது காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.