ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கொல்கத்தாவில் இன்று தொடக்கம்
கொல்கத்தா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டித் தொடர், கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரைப் போல, நகரங்களை அடிப்படையாகக் கொண்ட 8 அணிகள் மோதும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் உரிமத்தை இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் கிரிக்கெட் கேப்டன் டோனி பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் (கேரளா), சவுரவ் கங்குலி (கொல்கத்தா), விராத் கோஹ்லி (கோவா) உள்பட பிரபல கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் கால்பந்து அணிகளை வாங்கியுள்ளதால், ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.
தொடக்க விழா: ஐஎஸ்எல் தொடரின் தொடக்க விழா கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் சச்சின், கங்குலி, அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரகாம், ரன்பீர் கபூர் உள்பட அணி உரிமையாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் அசத்தலான நடனம் மற்றும் சலீம் மெர்ச்சன்ட், பிக்ராம் கோஷ், பாண்டோ, தபீக் குரேஷி, அஸ்லாம் தப்ரானி உள்பட எட்டு இசைக் குழுவினரின் அமர்க்களமான பாரம்பரிய இசை ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்த உள்ளது.
தொடக்க விழாவை தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோத உள்ளன. இறுதிப் போட்டி டிசம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது.