Breaking News

மகிழ்ச்சிக்கு பிறகு சோகம்; போராட்டத்தில் குதித்தனர் அ.தி.மு.க.வினர்!



 சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக முதலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய அ.தி.மு.க.வினர் பின்னர், ஜாமீன் மறுக்கப்பட்ட தகவலையடுத்து ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா உள்பட 4 பேரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் பவானி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதை பார்த்து அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால், அவர்களின் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இதையடுத்து, அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறினர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடிய அ.தி.மு.க.வினரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஆனால், ஜாமீன் மறுப்பு தகவலை கேட்டு விரக்தி அடைந்த அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பஸ் கண்ணாடி உடைப்பு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பால்பண்ணை வழியாக மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் கர்நாடக பதிவு எண் கொண்ட கே.பி.என் பேருந்துமீது, இருசக்கர வாகனங்களில் வந்த இரண்டு மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் முன்பக்க முற்றிலுமாக கண்ணாடி சிதறியது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அரியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், நாமக்கல், திருச்சங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் மீது அ.தி.மு.க.வினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்ஸின் காண்ணாடிகள் உடைந்தது. இதேபோல், பழனியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஒரு பஸ் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயிலில் தீ
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் பகுதியில் உள்ள சொர்ணகாளிஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக மராமத்து பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்காக கோயிலை சுற்றி ஓலை தட்டியால் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து, அங்குள்ள அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த பட்டாசின் தீப்பொறிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஓலை தட்டிகளின் மீது விழுந்து திடீரென தீப்பிடித்தது. அப்போது திடீரென அப்பகுதியில் மழை பெய்ததால் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. இதனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அ.தி.மு.க.வினர் கோயிலுக்கு தீ வைத்து விட்டதாகக் கூறி இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சி.ஆனந்தகுமார், அபுதாஹீர்
படம்: என்.ஜி.மணிகண்டன்