நவ., 1 முதல் சென்னை நோக்கியா ஆலை மூடல்
சென்னை ஸ்ரீபெரும்புதுார் நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலை, நவ., 1 முதல் மூடப்படும்' என, அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.இந்த ஆலையில், 6,800 தொழிலாளர்கள் இருந்தனர். இவர்களில், 6,000 பேருக்கு, விருப்ப ஓய்வு அளித்து, சில மாதங்களுக்கு முன், நிறுவனம் வெளியேற்றியது.இதன்பின், 800 பேர் பணியாற்றி வந்தனர். ஆலை நிரந்தரமாக மூப்படும் என்ற அறிவிப்பால், இந்த, 800 தொழிலாளர்களும், வேலை இழக்கின்றனர்.
மூடல் அறிவிப்பு:
ஆலை முடல் தொடர்பாக, நோக்கியா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலையை, கடந்த ஏப்ரல் முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில், சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆலையும் ஒன்று. ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போன்களுக்கான ஆர்டரை அளிக்கவில்லை. ஆர்டர் இல்லாத நிலையில், ஸ்ரீபெரும்புதுார் ஆலை, நவ., 1ம் தேதி முதல் மூடப்படுகிறது.மொபைல் போன்கள் வாங்க, நோக்கியா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம், நவ., 1ம் தேதி முதல் ரத்து செய்யவதாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதால், ஆலையை மூடும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இத்தகவல், நிறுவனத்தின் பங்குதாரர்கள், தொழிலாளர் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
எழுச்சியும், வீழ்ச்சியும்:
உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி ஆலையாக, சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதுாரில், 2006ல் நோக்கியா ஆலை துவங்கப்பட்டது. மாதத்துக்கு, 1.5 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை, 7,500 பேருக்கு நிரந்தர வேலை அளித்தது. 18 வயது முதல் 35 வயதுக்கு உட்டபட்டவர்கள் வேலை பெற்றனர்.குறிப்பாக, 60 சதவீதத்துக்கும் அதிகமான இளம்பெண்கள், நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். லாபகரமாக இயங்கி வந்த ஆலை, இந்த ஆண்டு, ஏப்ரலில், உலகின் கணினி மென்பொருள் ஜாம்பவானாகத் திகழும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.இந்தியா மட்டும் அல்லாமல் பிற நாடுகளில் இருந்த, நோக்கியா நிறுவனங்களையும், மைக்ரோசாப்ட் வாங்கியது.இந்நிலையில், 'இந்திய வருமான வரித்துறைக்கு, சென்னை நோக்கியா நிறுவனம், 21 ஆயிரம் கோடி ரூபாய், வரி பாக்கி வைத்துள்ளது. எனவே, வருமான வரியை செலுத்தும் வரை, சென்னை நோக்கியா ஆலையை முடக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.இந்த வழக்கை, விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரித்துறை கோரிக்கையை ஏற்று, வரி பாக்கிக்காக, சென்னை நோக்கியா ஆலையை முடக்கியது.இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட, விற்பனை ஒப்பந்தப்படி, சென்னை நோக்கியா ஆலையை, விற்க முடியவில்லை.இதற்கிடைய, தமிழக வணிக வரித்துறைக்கு, 2,400 கோடி ரூபாய், வரி செலுத்த வேண்டும் என, வணிக வரித்துறை, நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த சட்ட சிக்கல்களால், சென்னை நோக்கியா நிறுவனம் செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியது.
விருப்ப ஓய்வு:
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியதால், நோக்கியா நிறுவனம், மொபைல் போன் உற்பத்தியை படிப்படியாகக் குறைத்தது.இதைத் தொடர்ந்து, நிரந்தர ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை, கடந்த மே மாதம் அறிவித்தது.இதை எதிர்த்து, நோக்கியா தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பலன் அளிக்கவில்லை. 6,000 பேர் விருப்ப ஓய்வில் விடைபெற்றனர்.இறுதியாக, 800 பேர் மட்டுமே, சென்னை நோக்கியா ஆலையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களும், பெரிய அளவில் உற்பத்தியை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நவ., 1ம் தேதி முதல், சென்னை நோக்கியா ஆலை முடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூடல் முடிவுக்கு காரணம் என்ன?
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஒன்றான ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்க, வரிச் சலுகை, 24 மணி நேர மின்சாரம், குறைந்த கூலியில் தொழிலாளர்கள் என, பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அளிக்கின்றன.இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, பின்லாந்தை சேர்ந்த நோக்கியா ஆலை, ஸ்ரீபெரும்புதுாரில் துவங்கப்பட்டது. இந்நிறுவனம், பின்லாந்தில் உள்ள, தாய் நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி, மொபைல் போன்களை சென்னையில் உற்பத்தி செய்கிறது.இதற்காக, தாய் நிறுவனத்துக்கு, 'ராயல்டி' அளிக்கிறது. ஆண்டுதோறும் அளிக்கப்படும், 'ராயல்டி' தொகை, பல கோடி ரூபாய். இத்தொகைக்கு, வருமான வரி செலுத்த வேண்டும் என்பது, இந்திய வருமான வரித்துறை சட்டம்.இதை ஏற்க, நோக்கியா நிறுவனம் மறுத்தது. ஆனால், இந்திய வருமான வரிச் சட்டப்படி, தாய் நிறுவனத்துக்கு, நோக்கியா நிறுவனம் செலுத்திய, 'ராயல்டி'க்கு, 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை, நோக்கியா நிறுவனத்தை முடக்கியது.இதனால், தொடர்ந்து தொழில் செய்ய முடியாது என, கூறி நோக்கியா நிர்வாகம், ஆலையை மூடியுள்ளது.
தமிழக அரசின் பொறுப்பு என்ன?
நோக்கியா ஆலையின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு, உடனடியாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை, தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்பிரச்னையில், தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை, தொழிலாளர் நலச் சட்ட மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்படும் ஆலைகளுடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொள்கிறது. இந்த ஒப்பந்தப்படி, பல்வேறு சலுகைகள், ஆலைகளுக்கு அளிக்கப்படுகின்றன.இதற்கு கைமாறாக, தமிழக தொழிலாளர்களுக்கு, அந்நிறுவனங்கள் வேலை அளிக்க வேண்டும்.தமிழக அரசின் சலுகைகளைப் பெற்ற நோக்கியா நிறுவனம், ஆலையில், உற்பத்தியை நிறுத்த என்ன காரணம்; நிறுவனம் கூறும் காரணங்கள் உண்மையா என, மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஆலையில் உற்பத்தியை நிறுத்தும் நிலையில், தொழிலாளர்களுக்கு, மாற்று வேலையை, அந்நிறுவனம் ஏற்படுத்தித் தர வற்புறுத்த வேண்டும்.இல்லையேல், நோக்கியா ஆலையை, மாநில அரசு கையகப்படுத்தி, புதிய தொழிலை அங்கு துவங்க வேண்டும். இதற்கான, வேலைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மூடலை எதிர்த்து வழக்கு தொழிலாளர் சங்கம் முடிவு:''சட்டத்திற்கு புறம்பாக நோக்கியா நிர்வாகம் அறிவித்துள்ள, ஆலை மூடலை எதிர்த்து, வழக்குத் தொடருவோம்,'' என, நோக்கியா பொது தொழிலாளர் சங்க கவுர தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சவுந்திரராஜன் கூறினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:நோக்கியா நிறுவனம், ஆலையை மூடுவதாக நேரடியாக அறிவிக்கவில்லை. மாறாக, உற்பத்தி நிறுத்தி வைப்பு என, அறிவித்துள்ளது. ஆலையை மூடுகிறோம் என்றால், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதிலிருந்து தப்பிக்க, உற்பத்தி நிறுத்தி வைப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளனர்.நிறுத்தி வைக்கப்பட்ட உற்பத்தி, எப்போது துவங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, நோக்கியா ஆலையின் இந்த அறிவிப்பை எதிர்த்து, தொழிலாளர் நல ஆணையரிடம் வழக்குத் தொடருவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மூடலை எதிர்த்து வழக்கு தொழிலாளர் சங்கம் முடிவு:''சட்டத்திற்கு புறம்பாக நோக்கியா நிர்வாகம் அறிவித்துள்ள, ஆலை மூடலை எதிர்த்து, வழக்குத் தொடருவோம்,'' என, நோக்கியா பொது தொழிலாளர் சங்க கவுர தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான சவுந்திரராஜன் கூறினார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:நோக்கியா நிறுவனம், ஆலையை மூடுவதாக நேரடியாக அறிவிக்கவில்லை. மாறாக, உற்பத்தி நிறுத்தி வைப்பு என, அறிவித்துள்ளது. ஆலையை மூடுகிறோம் என்றால், மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதிலிருந்து தப்பிக்க, உற்பத்தி நிறுத்தி வைப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளனர்.நிறுத்தி வைக்கப்பட்ட உற்பத்தி, எப்போது துவங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, நோக்கியா ஆலையின் இந்த அறிவிப்பை எதிர்த்து, தொழிலாளர் நல ஆணையரிடம் வழக்குத் தொடருவோம். இவ்வாறு, அவர் கூறினார்.