Breaking News

பிளாஸ்டிக் கப் விற்றால் ரூ.1000 அபராதம் கலெக்டர் எச்சரிக்கை



நாகை,அக்.27: பிளாஸ்டிக் கப் விற்பனை செய்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகை நகராட்சிக்குட்பட்ட நடுவர் சன்னதி, கீழையூர் ஒன்றியம் மணக்குடி, எட்டுக்குடி, கீழ்வேளூர் ஒன்றியம தேவூர், நாகப்பட்டினம்-நாகூர் பிரதான சாலை, தெற்கு பால் பண்ணைச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சுரேஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஊரக பகுதிகளில் கொசு உற்பத்தியால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


பிளாஸ்டிக் கப் அதிகமாக பயன்படுத்தும் டீக்கடைகள், பழச்சாறு விற்பனையகங்கள், டாஸ்மாக் மதுபான பார்கள் மற்றும் அவற்றின் அருகில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசுடன் முதற்கட்டமாக ரு.1000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிளாஸ்டிக் கப் விற்பனையை தொடர்ந்தால் அவர்களுடைய அபராத தொகையை அதிகப்படுத்துவதுடன் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.