Breaking News

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் தனி நபர் வசூலை தடுக்க வேண்டும்: புதுச்சேரி ஆளுநரிடம் மனு



காரைக்கால்,அக்.25: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் தனிநகர் வசூலை தடுக்க வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநரிடம் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தலைவர் டாக்டர் அனந்தகுமார் மனு அளித்துள்ளார். இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில், அரசுக்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் தனிநபருக்கு செல்கிறது. மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்க, சுற்றிப்பார்க்க வரும் மக்களிடம், வாகன வசூல் செய்யப்படுகிறது. பணம் கொடுத்து வாங்கும் மீனுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்வது. அரசலாற்றங்கரையில் பொதுமக்கள் நடைபாதையில் மீன்பிடி சாதனங்கள், மீன்கழிவுகளை போட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, 

அரசலாற்றங்கரையில் உள்ள பாதுகாப்பு சுவர்களை, படகுகளை இறக்கி ஏற்றி சேதப்படுத்துவது தொடர்பாக, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள், கலெக்டருக்கு பலமுறை புகார் மனு வழங்கியது. அதன் மீது மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், துணை நிலை ஆளுநருக்கு அதே புகார்கள் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆளுநர் ஆய்வு செய்தார். அரசலாற்றங்கரையில் 90 சதவீதம் மீனவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.


துறைமுகத்தில் போதுமான வசதி இல்லாததாலும், அங்கு படகை நிறுத்த, மீனை விற்க, வாகனம் நுழைய அனைத்திற்கும் கட்டணம் வசூல் செய்யப்படுவதால்தான் வெளிமாவட்ட படகுகள் இங்கு நிறுத்தப்படுகிறது. அதனால், கலெக்டர் தலைமையில் அமையும் குழு இந்த அரசலாற்றங்கரையை ஒழுங்குப்படுத்துவதுடன், மீன்பிடி துறைமுகத்தில் நடக்கும் தனிநபர் வசூலையும் உடனே தடுத்து நிறுத்தவேண்டும். துறைமுகம் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் துறைமுகத்தை முறையாக மீனவளத்துறை வசம் ஒப்படைத்து, அவர்கள் மூலம் குழு அமைத்து அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும். ஆளுநரிடம் ஏற்கெனவே மனு கொடுத்திருந்தாலும் இது குறித்து தனி மனுவாக கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.