நாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம்: சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
நாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்..
காரைக்கால் மார்க் (MARG) துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக பல தளங்களில் போராடி வருகின்றன. ஆனால் இதுவரை எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை; நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் இப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிவருகிறது.
ஒருங்கிணைந்த நிலக்கரி இறக்குமதி எதிர்ப்புக்குழு சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாலை 04 மணிக்கு நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகின்றது.
இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராளி பேரா. த.ஜெயராமன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்..